திருவிருந்து தொழுகை – பரிசுத்த நற்கருணை ஆராதனை

Holy Communion in Tamil

கீதம்:

(திருப்பணிவிடையாளர் திருவிருந்து மேஜையண்டை வரும்போது சபையார் நிற்கவேண்டும். தொழுகையில் உபயோகிக்கப்படும் வேதாகமத்தைக் குருவாகிலும் அவருடன் இருப்பவரில் ஒருவராகிலும் தம் இரு கைகளாலும் ஏந்திவந்து திருமேசையிலாவது வாசிப்புப் பீடத்திலாவது வைக்கவேண்டும்.)

(குரு ஜனங்கள் முகமாய்த் திருமேசைக்குப்பின் நின்று சொல்லுவது)

நின்றவாறே வேண்டுதல் செய்வோமாக

எல்லா இருதயங்களையும், எல்லா விருப்பங்களையும், எல்லா இரகசியங்களையும் அறிந்திருக்கிற சர்வ வல்லமையுள்ள கடவுளே, நாங்கள் தேவரீரிடத்தில் பரிபூரணமாய் அன்புகூரவும், உமது பரிசுத்த நாமத்தை உத்தமமாய் மகிமைப்படுத்தவும், உமது பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எங்கள் இருதயத்தின் சிந்தனைகளைச் சுத்தம் பண்ணியருள எங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

(பின் எல்லாரும் சேர்ந்து பாட அல்லது சொல்லவேண்டியது)

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக. கர்த்தராகிய பராபரனே, பரம ராஜாவே, சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய கடவுளே உம்மைத் துதிக்கிறோம், உம்மைப் புகழுகிறோம், உம்மை வணங்குகிறோம், உம்மை மகிமைப் படுத்துகிறோம், உமது சிறந்த மகிமையினிமித்தம் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்.

ஆண்டவராயிருக்கிற ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே, கர்த்தராகிய பராபரனே, பிதாவின் சுதனே, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும்.

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறவரே, எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும். தேவனாகிய பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே, எங்களுக்கு இரங்கும்.

நீரே பரிசுத்தர்,நீரே கர்த்தர், இயேசுகிறிஸ்துவே தேவரீர் ஒருவரே, பரிசுத்த ஆவியோடே, தேவனாகிய பிதாவின் மகிமையிலே உன்னதமானவராயிருக்கிறீர். ஆமென்.

(அல்லது பின்வரும் தொன்மையான இறைப்புகழ் பாடலை மூன்றுதரம்
பாடலாம் அல்லது சொல்லலாம்)

பரிசுத்த தேவனே,

பரிசுத்தமும் வல்லமையுமானவரே,
பரிசுத்தமும் நித்தியமுமானவரே,
எங்களுக்கு இரங்கும்.

(அல்லது குரு பின்வரும் லித்தானியா ஜெபத்தைச்சொல்ல, மறுமொழியைச் சபையார் சேர்ந்து சொல்லுவார்கள்)

அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர், வல்லமையையும், ஐசுவரியத்தையும், ஞானத்தையும், பெலத்தையும், கனத்தையும், மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார். (வெளி,5:12)

ஆட்டுக்குட்டியானவருக்கு மகிமை உண்டாவதாக.

சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியான வருக்கும், ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும், வல்லமையும், சதாகாலங்களிலும் உண்டாவதாக. (வெளி.5:13)

ஆட்டுக்குட்டியானவருக்கு மகிமை உண்டாவதாக

தேவரீர்………. பாத்திரராயிருக்கிறீர். ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர். (வெளி.5:9) .

ஆட்டுக்குட்டியானவருக்கு மகிமை உண்டாவதாக

(அனைவரும் சேர்ந்து சொல்லுவது)

இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியான வருக்கும் உண்டாவதாக. எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும்பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென். (வெளி. 7:10, 12)

(அல்லது வேறொரு கீதம் பாடலாம்)

பத்துக் கற்பனைகள்

கடவுள் திருவுளம் பற்றிச் சொல்லிய வார்த்தைகளாவன: உன் தேவனாகிய கர்த்தர் நானே; என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, இந்தப் ணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை பிரமாண ஏவியருளும்.

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் : உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம்.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக ஆறுநாளும் நீ வேலைசெய்து உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக! ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை
ஏவியருளும்.

உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை
ஏவியருளும்.

கொலை செய்யாதிருப்பாயாக.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை
ஏவியருளும்.

விபசாரம் செய்யாதிருப்பாயாக.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை
ஏவியருளும்.

களவு செய்யாதிருப்பாயாக.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை
ஏவியருளும்.

பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை
ஏவியருளும்.

இச்சியாதிருப்பாயாக.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணங்கள் எல்லாவற்றையும் எங்கள் இருதயத்தில் பதித்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

(அல்லது)

நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்து சொன்னதாவது: இஸ்ரவேலே கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே, இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கின்றன என்பதே.

ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். ஆமென்.

(பின் குரு சொல்வது)

சகோதர, சகோதரிகளே! நாம் இப்பொழுது கடவுளுடைய மகா பரிசுத்த வசனத்தைக் கேட்கவும், ஆண்டவருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் பெற்றுக்கொள்ளவும் இங்கே கூடி வந்திருக்கிறோம்.உத்தம மனஸ்தாபத்தோடும், விசுவாசத்தோடும் அவரிடத்தில் கிட்டிச் சேருவதற்காகக் கடவுளுடைய கிருபையைத் தேடி முழங்காற்படியிட்டு, அமைதியாக நம்மை நாமே சோதித்து அறிவோமாக.

(எல்லோரும் முழங்காற்படியிட்டு சற்றுநேரம் அமைதியாயிருந்தபின் குரு சொல்லுவது)

உங்கள் பாவங்களினிமித்தம் முழு இருதயத்தோடே உண்மையாய் ய் மனஸ்தாபப்பட்டு, பிறரிடத்தில் அன்பும், சிநேகமுமாயிருந்து, இனி தேவனுடை கற்பனைகளைக் டைய கைக்கொண்டு அவருடைய பரிசுத்த மார்க்கத்தில் நடந்து புதுவாழ்வு வாழவிரும்புகிற நீங்கள், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய், சர்வ வல்லமையுள்ள கடவுளோடு மறுபடியும் ஒப்புரவாகும்படி, உங்கள் பாவங்களை மனத்தாழ்மையாய் அறிக்கையிடுங்கள்.

(எல்லாரும் சேர்ந்து சொல்லுவது)

பரம பிதாவே, உமக்கு விரோதமாகவும், எங்கள் அயலாருக்கு விரோதமாகவும் பாவஞ்செய்தோமென்று அறிக்கையிடுகிறோம். ஒளியில் நடவாமல் இருளில் நடந்து வந்தோம். கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லியும் தீமையை விட்டு விலகவில்லை. எங்களுக்கு இரங்கவேண்டுமென்று உம்மிடம் மன்றாடுகிறோம். இயேசு கிறிஸ்துவினிமித்தம், எங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னியும். உமது பரிசுத்த ஆவியரால் எங்களைச் எங்கள் மனச்சாட்சியை உயிர்ப்பித்தருளும். உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி நாங்கள் இனி புது ஜீவனுள்ளவர்களாய் உமக்கு ஊழியம் செய்யத்தக்கதாக மற்றவர்களுக்கு மன்னிக்க எங்களுக்கு உதவிபுரியும். ஆமென்.

(அல்லது வேறு முறைகளைக் குரு உபயோகிக்கலாம் குரு எழுந்து நின்று சொல்லுவது)

இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த் தம்மிடத்தில் உண்மையாய் மனந்திரும்புகிற யாவருக்கும் அருளப்படுகிற கிருபை நிறைந்த தேவ வசனத்தைக் கேளுங்கள்.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத். 11:25)

தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)

பாவிகளை இரட்சிக்கக் கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். என்கிற வார்த்தை, உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது. (I தீமோ. 1:15)

ஒருவன் பாவஞ் செய்வானானால், நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து, நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்; நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே. I யோவான் 2:1,2)

(சற்றுநேரம் அமைதியாயிருந்தபின் குரு சொல்வது)

நம்முடைய பரமபிதாவாகிய சர்வ வல்லமையுள்ள கடவுள் உத்தம மனஸ்தாபத்தோடும், உண்மையான விசுவாசத்தோடும், தம்மிடத்திற்கு மனந்திரும்பி, தங்கள் சகோதரர் குற்றங்களை மன்னிக்கிற யாவருக்கும் பாவ மன்னிப்பை அருளிச்செய்வோம் என்று மிகுந்த இரக்கமாய் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் உங்களுக்கு இரங்கி உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து அவைகளினின்று உங்களை விடுதலையாக்கி நன்மையிலும் உங்களை சகல உறுதிப்படுத்தி, நிலைநிறுத்தி, உங்களை நித்திய ஜீவக் கரையில் சேர்ப்பாராக.

ஆமென், தேவரீருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.

(பாவமன்னிப்பைக் கூறும், இந்த அறிக்கையை ஒரு ஜெபமாக மாற்றி உங்கள் என்பதற்கு பதிலாக நமக்கு என்று சொல்லி குரு இதை இப்படி ஜெபமாக உபயோகித்தால் திரு வசனமாகிய அருள் மொழிகளுக்குமுன் இதைச் சொல்ல வேண்டும்)

திருவசனப் போதனை

ஆண்டவர் உங்களோடிருப்பாராக

அவர் உமது ஆவியோடுமிருப்பாராக

ஜெபம் செய்வோமாக

(அந்த நாளுக்குரிய சுருக்க ஜெபம். (தென் இந்தியத் திருச்சபைக் கைநூலிலும் பேராய அருளுரைக் கை நூலிலும் கொடுக்கப்பட்டுள்ளது) அல்லது வேறொரு சுருக்க ஜெபம் செய்யவும். திருமறைப்பாடங்கள் படிக்கப்படும்போது எல்லா பாடங்களுக்கும் அல்லது சுவிசேஷ பாடத்திற்காவது யாவரும் எழுந்து நிற்கவும்)

(பழைய ஏற்பாட்டுப் பாடம் வாசிப்பவர் சொல்லுவது)

……. ஆகமம் ….. அதிகாரம் வசனம் முதல் அடங்கிய தேவனுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.

(வாசித்து முடிந்தவுடன் பாடம் முடிந்தது என்று சொல்லவும்)

கடவுளே, உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

(சங்கீதம் அல்லது கீதம் இங்கே பாடலாம்.

நிரூப வாக்கியம் வாசிப்பவர் சொல்லுவது)

நிரூபம் …அதிகாரம். வசனம் முதல் அடங்கிய தேவனுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.

(வாசித்து முடிந்தவுடன் பாடம் முடிந்தது என்று சொல்லவும்)

கடவுளே, உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

(சுவிசேஷ பாடம் வாசிப்பவர் சொல்லுவது)

சுவிசேஷம்…..அதிகாரம்…. வசனம் முதல் அடங்கிய தேவனுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். (வாசித்து முடிந்தவுடன் பாடம் முடிந்தது என்று சொல்லவும்)

கிறிஸ்துவே, உமக்கு மகிமை உண்டாவதாக.

பின் சபையார் உட்கார்ந்திருக்க அருளுரை ஆற்றவும்

பின் எல்லோரும் எழுந்துநின்று நிசேயா விசுவாசப் பிரமாணத்தைச் சொல்ல அல்லது பாடவேண்டும்.

வானத்தையும், பூமியையும், காணப்படுகிறதும், காணப்படாததுமான, எல்லாவற்றையும் படைத்தவரா யிருக்கிற, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய, ஒரே கடவுளை விசுவாசிக்கிறேன்.

ஒரே கர்த்தருமாய், கடவுளுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற, இயேசு விசுவாசிக்கிறேன். அவர் சகல கிறிஸ்துவையும் உலகங்களும் உண்டாவதற்கு முன்னே, தமது பிதாவினாலே ஜெநிப்பிக்கப்பட்டவர், தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர். மெய்தேவனில் மெய் தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர்; பிதாவோடே ஒரே தன்மையுடையவர்; சகலத்தையும் உண்டாக்கினவர், மனிதராகிய நமக்காகவும், நமக்கு இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கி பரிசுத்த ஆவியினாலே, கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார். நமக்காகப் பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் பண்ணப்பட்டார். வேதவாக்கியங் களின்படி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரமண்டலத்துக்கேறி பிதாவின்
வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.

கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத்தொழுது ஸ்தோத்திரிக்கப்படுகிறவருமாய் தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்த பொதுவான திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன்.பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.

வேண்டுதல் செய்வோமாக

(முதலாம் வித்தானியா)

எல்லா மனிதருக்காகவும் ஜெபங்களையும் விண்ணப்பங் களையும் செய்து, ஸ்தோத்திரங்களைச் செலுத்த வேண்டும் என்று கற்பித்தருளின, சர்வ வல்லமையுள்ள கடவுளே, எங்கள் ஜெபத்தை கேட்டருளும்.

எங்குமுள்ள திருச்சபைக்குத் தேவரீர் உண்மையும் ஐக்கியமும், ஏக சிந்தையுமுள்ள மனதை, இடைவிடாம அருளிச்செய்யும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

உம்முடைய திருநாமத்தை அறிக்கையிடுகிற யாவரும் உமது பரிசுத்தவசனத்தின் சத்தியத்தைக் குறித்து இசைந்த மனதுள்ளவர்களாயிருந்து, தைரியத்தோடும் உண்மையோடும் அதற்கு சாட்சி பகர அனுக்கிரகஞ் செய்யும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

சகல தேசத்தாரையும், நீதியின் பாதையிலும், சமாதான வழியிலும் நடத்தியருளும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

நாங்களும், மற்றெல்லா மனிதரும், தேவ பக்தியோடும், சாந்தத்தோடும் ஆளப்படும்படி, மனிதருடைய விஷயங்களில் அதிகாரம் வகிப்பவர்களையும், விசேஷமாய் இந்தியக் குடியரசின் தலைவராகிய ..ஐயும், எங்களை ஆளுகிறவர்களையும், உமது பரிசுத்தமும் சமாதானமுமான ஞானத்தால் நடத்தியருளும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

எல்லாப் பேராயர்களும், குருக்களும், உதவிக் குருக்களும் விசேஷமாக …… என்னும் எங்கள் பிரதமப் பேராயரும் …. என்னும் எங்கள் அத்தியட்சரும் தங்கள் நடக்கையினாலும், போதகத்தினாலும், சத்தியமும் ஜீவனுமுள்ள உமது வசனத்தைப் பிரசித்திப்படுத்தி, உமது பரிசுத்த சாக்கிரமெந்துகளை, ஒழுங்காயும் செம்மையாயும் கொடுக்க, அவர்கள் அனைவருக்கும், உமது கிருபையை அருளிச்செய்யும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

சகல தேசத்தாருக்குள்ளும், உமது சுவிசேஷம் பரவும்படி உழைத்துவரும் யாவரையும் வழிநடத்தி, ஆசீர்வதித்து, எல்லாக் கல்வி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும், மருத்துவ நிறுவனங்களையும் உமது ஆவியானவரால் பிரகாசிப்பித்தருளும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

உமது பரம் ஆதரவினாலே நாங்கள் பஞ்சத்தினின்றும், வறுமையினின்றும், காக்கப்பட்டு பூமியின் நற்பலன்களை, அதனதன் காலத்தில், நன்றியறிதலான இருதயத்தோடு அனுபவிக்கும்படி, எங்களுக்குக் கிருபை செய்தருளும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

உம்முடைய ஜனங்கள் எல்லாரும் சிறப்பாய் இவ்விடத்தில் கூடி வந்திருக்கிற இந்தச் சபையாரும், சாந்த இருதயத்தோடும், தகுந்த வணக்கத்தோடும், உமது பரிசுத்த வசனத்தைக் கேட்டு, உட்கொண்டு தங்கள் வாழ்நாளெல்லாம் பரிசுத்தமும், நீதியும் உள்ளவர்களாய், உமக்கு உத்தம ஊழியஞ்செய்ய, இவர்களுக்கு உமது பரம கிருபையைக் கொடுத்தருளும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

நிலையில்லாத, இந்த ஜீவ காலத்தில், துன்பம், துக்கம்,வறுமை, வியாதி முதலான உபத்திரவங்களால் வருத்தப்படுகிற யாவரையும், உமது தயவினால் தேற்றி ஆதரித்தருளும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

உம்மிடத்தில் விசுவாசமும், பயபக்தியுமுள்ளவர்களாய் ஜீவித்துப்போன உமது அடியார் எல்லாருக்காகவும் நாங்கள் உம்மைத் துதித்து அவர்களோடுகூட நாங்களும், உமது பரம இராஜ்யத்தில் பங்குபெறும்படி அவர்கள் காட்டிய நல்ல மாதிரியைப் பின்பற்ற எங்களுக்குக் கிருபைசெய்தருள வேண்டும் என்று மன்றாடுகிறோம்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!

சர்வ வல்லமையுள்ள கடவுளே, சகல ஞானத்திற்கும் காரணரே, நாங்கள் வேண்டிக்கொள்வதற்குமுன் எங்கள் அவசியங்கள் உமக்குத் தெரியும், நாங்கள் அறியாமல் கேட்கிறோம் என்பதும் உமக்குத் தெரியும், தேவரீர் எங்கள் பலவீனங்களைப் பார்த்து, இரங்கி, நாங்கள் எங்கள் அபாத்திரத்தின் நிமித்தம் துணிந்து கேட்கக்கூடாதவைகளையும், எங்கள் குருட்டாட்டத்தின் நிமித்தம் கேட்கத் தெரியாதவைகளையும், உம்முடைய குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் புண்ணியத்தினிமித்தம் எங்களுக்கு அனுக்கிரகித்தருளும். ஆமென்.

(இரண்டாவது லித்தானியா)

பரத்திலிருந்து வரும் சமாதானத்திற்காகவும், நம்முடைய ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.

ஆண்டவரே, கிருபையாயிரும்

அகில, உலக சமாதானத்திற்காகவும், கடவுளுடைய பரிசுத்த சபைகளின் நல்வாழ்வுக்காகவும், அவைகளின் ஒருமைப்பாட்டுக் காகவும், ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.

ஆண்டவரே, கிருபையாயிரும்

நம்முடையப் பேராயர்களும், மற்றெல்லா பணிவிடைக் காரர்களும், விசேஷமாய் ….. என்னும் நமது பிரதம பேராயரும் ….. என்னும் நமது பேராயரும் நல்ல இருதயத்தோடும், சுத்த மனசாட்சியோடும் தங்கள் பணிவிடையை நிறைவேற்ற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.

ஆண்டவரே, கிருபையாயிரும்

நமது தேசத்தின் அதிபதிகளுக்காகவும் அதிகாரம் வகிப்பவர் எல்லோருக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.

ஆண்டவரே,கிருபையாயிரும்

பிணியாளர், துன்பப்படுவோர், துக்கப்படுவோர், மரணத்தருவாயிலிருப்போர் அனைவருக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.

ஆண்டவரே, கிருபையாயிரும்

ஏழைகள், பட்டினியாயிருப்போர், ஆதரவற்றோர், விதவைகள், உபத்திரவப்படுவோர் அனைவருக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.

ஆண்டவரே, கிருபையாயிரும்

அந்தகாரத்தினின்று நம்மைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய மகத்துவங்களைக் காண்பிக்கும் பொருட்டாக, நமக்காகவும், கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைபண்ணும் யாவருக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.

ஆண்டவரே, கிருபையாயிரும்

இவ்வுலகத்தில் அவரைச் சேவித்து இப்போது ஓய்வுபெற்றிருக்கும் அவரது அடியார் அனைவரோடும்கூட, நாமும் அவரது முடிவற்ற மகிழ்ச்சியின் நிறைவில் பங்குபெற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.

ஆண்டவரே, கிருபையாயிரும்

(லித்தானியாவுக்குப்பின் குரு சொல்லுவது)

சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, திருச்சபையின் முழுச் சரீரத்தையும் உமது ஆவியானவரால் ஆண்டு பரிசுத்தப்படுத்துகிறவரே, உமது திருச்சபையில் எல்லா நிலைமையிலுள்ள மனிதருக்காகவும் உமது சந்நிதியில் நாங்கள் ஏறெடுக்கும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் அங்கீகரித்தருளும். ஒவ்வொரு அங்கத்தினரும் தன் தன் அழைப்பிலும், பணிவிடையிலும் உண்மையோடு உமக்கு ஊழியஞ்செய்ய அனுக்கிரகிக்கவேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

(பின்பு முதல் ஆசீர்வாதத்தைக் குரு சொல்லுவார்)

நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் கிருபையும், கடவுளுடைய அன்பும், பரிசுத்தாவியரின் ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட எப்போதும் இருப்பதாக. ஆமென்.

(திருவிருந்தில் பங்குபெறவேண்டாதோர் இவ்வேளையில் வெளியேறவும்)

அப்பம் பிட்குதல்

எல்லோரும் எழுந்து நிற்க, குரு சொல்லுவது

:

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எவ்வளவு நன்மையும், எவ்வளவு இன்பமுமானது. (சங். 133:1)

அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும், ஒரே சரீரமுமாயிருக்கிறோம். (1.கொரி . 10:17)

நான் அவருடைய கூடாரத்திலே ஆனந்த பலிகளையிட்டு ஆண்டவரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணுவேன். (சங். 27:6)

சமாதான வாழ்த்து இங்கே கொடுக்கலாம்.

(ஒரு கீதம் பாடப்படும், அப்பொழுது சபையாருடைய காணிக்கைகளுடன் பரிசுத்த நற்கருணைக்கு வேண்டிய அப்பமும் திராட்சரசமும் முன்னால் கொண்டுவரப்பட்டுத் திருமேஜையில் வைக்கப்படும். கொண்டுவருபவர்கள் பின்வரும் ஜெபம் சொல்லப்படுகையில் திருமேஜையின்முன் நிற்பார்கள்).

எல்லோரும் இன்னும் நின்றுகொண்டிருக்க, குரு சொல்லுவது :

பரிசுத்த பிதாவே, உமது கிருபாசனத்தண்டையில் பிரவேசிப்பதற்குப் புதிதும், ஜீவனுமான வழியை உமது அருமையான குமாரனின் இரத்தத்தினால் எங்களுக்கு உண்டுபண்ணினீரே; நாங்கள் அபாத்திரராயினும் அவர் மூலமாக உம்மண்டை வருகிறோம். எங்களையும், இந்தக் காணிக்கைகளையும் உம்முடைய நாம மகிமைக்காக அங்கீகரித்து உபயோகிக்கும்படியாக, தாழ்மையோடு வேண்டிக்கொள்கிறோம். வானத்திலும், பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள். உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுக்கிறோம். ஆமென்.

ஜெபம் செய்வோமாக

குருவும், ஜனங்களும் முழங்காற்படியிட்டுச் சேர்ந்து சொல்லுவது :

இயேசுவே, உத்தம பிரதான ஆசாரியரே, நீர் உமது சீஷர்கள் மத்தியில் பிரசன்னமாயிருந்ததுபோலவே எங்கள் நீரே மத்தியிலும் பிரசன்னமாகி, அப்பத்தைப் பிட்கையில், எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தியருளும். பிதாவோடும், பரிசுத்த ஆவியரோடும், ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிறீர். ஆமென்.

(குரு இப்பொழுது எழுந்து நிற்பார்

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

அவர் உமது ஆவியோடும் இருப்பாராக.

உங்கள் இருதயத்தை உயர்த்துங்கள்.

எங்கள் இருதயத்தை ஆண்டவரிடத்தில் உயர்த்துகிறோம்.

நம்முடைய ஆண்டவராகிய கடவுளுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.

அப்படிச் செய்வது தகுதியும், நீதியுமாயிருக்கிறது.

ஆண்டவரே, பரிசுத்த பிதாவே, சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே நாங்கள் எக்காலத்திலும், எவ்விடத்திலும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறது தகுதியும் நீதியும் எங்களுக்கு விசேஷித்த கடமையுமாயிருக்கிறது.

உமது குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீர் வானங்களையும், பூமியையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தீர். மனிதனையும் உமது சாயலாக உண்டாக்கினீர். அவன் பாவத்தில் விழுந்தபோது புது சிருஷ்டியின் முதற்பலனாக நீர் அவனை மீட்டுக்கொண்டீர்.

ஆதலால் தூதரோடும் பிரதான தூதரோடும் பரம சபையனைத்தோடும் நாங்களும் உமது மகிமையுள்ள நாமத்தைப் புகழ்ந்து மேன்மைப்படுத்தி சேனைகளின் கர்த்தராகிய தேவனே நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கின்றன. உன்னதமானவராகிய தேவரீருக்கே மகிமை உண்டாவதாக என்று, இடைவிடாமல் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். ஆமென்.

கர்த்தரின் நாமத்தினாலே வந்தவரும் வருகிறவருமானவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். உன்னதத்தில் ஓசன்னா.

ஆம் பிதாவே! நீர் பரிசுத்தர், நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். தேவரீர் மனிதரில் உருக்கமாய் அன்புகூர்ந்து உமது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து எங்கள் தன்மையைத் தரித்துக்கொள்ளவும், சிலுவையில் மரித்து எங்களை மீட்டுக் கொள்ளவும், அவரைத் தந்தருளினீரே! அவர் சிலுவையில் ஒரே தரம் தம்மைத்தாமே ஏக பலியாக ஒப்புக்கொடுத்துச் சர்வ லோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்வதற்கு நிறைவும், பூரணமும், போந்ததுமான, பலியையும், காணிக்கையும் பரிகாரத்தையும் செலுத்தினதுமல்லாமல், தமது அருமையான மரணத்தை என்றைக்கும் நினைப்பூட்டும் ஞாபகத்தை நியமித்து தாம் திரும்ப வருமளவும், நாங்கள் அதை அனுசரித்து வரும்படி தமது பரிசுத்த சுவிசேஷத்தில் கட்டளையிட்டருளினாரே;

அவர் தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி அதைப்பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து, நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

ஆண்டவரே! ஆசீர்வதிக்கப்பட்ட இந்த அப்பத்தின் மூலம் நீர் தியாகப் பலியாகக் பிட்கப்பட்டீர் என்பதை நினைவு கூருகிறோம்.

அப்படியே போஜனம் பண்ணினபின்பு, அவர் t பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள். இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும், அநேகருக்காகவும், என்னை சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம், இதைப் பானம் பண்ணும்பொழுதெல்லாம் நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்று திருவுளம் பற்றினார்.

ஆண்டவரே! ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பாத்திரத்தின் மூலம் பாவ மன்னிப்பை உறுதிப்படுத்த உம் உதிரத்தைச் சிந்தினீர் என்பதை நினைவு கூருகிறோம்.

(குருவானவர் சபையாருடன் இணைந்து சொல்வது)

இந்தச் சாக்கிரமெந்தின் மூலம் உமது மரணத்தை நினைவு கூருகிறோம். உமது உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம். நீர் திரும்பி வரக் காத்திருக்கிறோம். கிறிஸ்துவே உமக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.

ஆதலால் பிதாவே, உமது குமாரனாகிய எங்கள் ஆண்டவரின் அருமையான பாடுகளையும், மரணத்தையும், மகிமையான உயிர்த்தெழுதலையும், பரமேறுதலையும் நினைவுகூர்ந்து, உமது அடியார்களாகிய நாங்கள், அவருடைய கட்டளையின்படியே, அவர் திரும்பி வருமளவும், அவரை நினைவுகூர்ந்து இதைச் செய்கிறோம். அவரில் நீர் எங்களுக்காக நிறைவேற்றின பூரண மீட்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

கர்த்தாவே எங்கள் கடவுளே, உம்மைத் துதிக்கிறோம், உம்மைப் புகழுகிறோம், உம்மை மகிமைப்படுத்துகிறோம்

இரக்கமுள்ள பிதாவே, நாங்கள் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயும், நாங்கள் ஆசீர்வதிக்கிற பாத்திரம், கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயுமிருக்கும்படி எங்களையும்நீரே தந்த இந்த அப்பத்தையும், திராட்சரசத்தையும் உமது பரிசுத்த ஆவியினால் பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று மிகுந்த தாழ்மையோடு மன்றாடுகிறோம். நாங்களெல்லாரும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவில் கூட்டி இணைக்கப்பட்டவர்களாகி, விசுவாசத்தில் ஒருமைப்படவும், தலையாகிய அவருக்குள் எல்லாவற்றிலேயும் வளரவும் கிருபை செய்யும். அவரோடும், பரிசுத்த ஆவியரோடும் ஐக்கியமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய உமக்கு, அவர் மூலமாய்ச் சகல கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

(நமது இரட்சகராகிய கிறிஸ்து கற்பித்தபடி அவரில் நமக்கு அருளப்பட்ட தைரியத்தோடே சொல்வோமாக)

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப் படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய் குற்றஞ் செய்கிறவர் களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும். மகிமையும், என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

(எல்லோரும் முழங்காலில் நின்று சற்றுநேரம் அமைதியாய் இருந்து பின்வரும் மனத்தாழ்மையின் ஜெபத்தை ஏறெடுப்பர்)

இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுயநீதியை நம்பி, நாங்கள் உம்முடைய பந்தியில் சேரத் துணியாமல், தேவரீருடைய அளவற்ற இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம்முடைய மேஜையின் கீழ் விழும் துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள நாங்கள் பாத்திரர் அல்ல, ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ் செய்கிற லட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர். ஆகையால், கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும், இரத்தத்தாலும் எங்கள் பாவமுள்ள சரீரமும், ஆத்துமாவும் சுத்தமாகி,எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும், அவர் எங்களுக்குள்ளும் வாசமா யிருப்பதற்கு ஏற்ற விதமாய், அவருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.

(குரு எழுந்துநின்று அப்பத்தைப் பிட்டுச் சொல்லுவது)

நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாய் இருக்கிறதல்லவா? (I கொரி. 10:16)

(இப்போது போதகரும், பணிவிடையாளர்களும் ஞான அனுமானங்களை உட்கொள்வர். இவ்வேளையில் கீழ்க்கண்ட கீதம் சொல்ல அல்லது பாடப்படலாம்)

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியே, எங்களுக்கு இரங்கும்.

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியே, எங்களுக்கு இரங்கும்.

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியே, உமது சமாதானத்தைத் தாரும்.

(அல்லது வேறு ஒரு கீதம் பாடலாம்)

குரு : கர்த்தருடையவைகள் கர்த்தரின் பிள்ளைகளுக்கே! கர்த்தரின் பந்தி உங்களுக்காய் ஆயத்தமாக்கப் பட்டிருக்கிறது வாருங்கள்! கர்த்தர் உங்களைப் பந்திக்குஅழைக்கிறார்.

(சபையார் இப்பொழுது நற்கருணை பெறுவார்கள்)

(நற்கருணை கொடுக்கும்போது சொல்லவேண்டிய வார்த்தைகளாவன)

ஜீவ அப்பமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சரீரம்.

மெய்யான திராட்சையாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம்.

(எல்லோரும் பங்கு பெற்றபின் சபையார் முழங்காலில் நிற்க குரு சொல்லுவது)

கிறிஸ்துவின் சரீரமும், இரத்தமுமாகிய சாக்கிரமெந்தை விசுவாசத்தினால் பெற்றுக்கொண்டவர்களாகிய நாம் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.

(கீழ்க்கண்ட ஜெபங்களில் ஒன்றைக் குருவானவர் தனியாகவோ எல்லோரும் சேர்ந்தோ சொல்ல அல்லது பாடலாம்)

சர்வ வல்லமையுள்ள கடவுளே, பரமபிதாவே, உமது நேசக் குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள், எங்களை உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, அவருடைய விலைமதியாத திருச் சரீரமும் இரத்தமுமாகிய ஞான ஆகாரத்தால் எங்களைப் போஷித்திருக்கிறீர். எங்கள் பாவங்களை மன்னித்து, நித்திய ஜீவனை எங்களுக்கு வாக்குப் பண்ணியிருக்கிறீர். அளவிடப்படாத இந்த நன்மைகளுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். சரீரமும் ஆத்துமாவுமாகிய எங்களை, பரிசுத்தமும் ஜீவனுமுள்ள பலியாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இதுவே நாங்கள் செய்யத்தக்க ஆத்மீக ஆராதனை. நாங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவரீருடைய நன்மையும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக எங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகும்படி எங்களுக்கு அருள்புரியும். கடைசியில் நாங்கள் உமது பரிசுத்தவான்கள் அனைவரோடும் உமது நித்திய ராஜ்யத்தின் ஆனந்தத்தை அடையத்தக்கதாக, இவ்வுலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்து நடக்க எங்களுக்குக் கிருபை செய்யும். உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாய்ச் சதாகாலமும் ஜீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் இவைகளை வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும். ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பெலனும், சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.

சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, இந்தப் பரிசுத்த இரகசியங்களை ஏற்றவிதமாய் வாங்கியிருக்கிற எங்களைத் தேவரீர் உம்முடைய குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் விலைமதியாத திருச் சரீரமும் இரத்தமுமாகிய ஞான ஆகாரத்தினால் போஷித்ததற்காக உம்மைத் துதிக்கிறோம். தேவரீர் எங்கள்மேல் தயைகூர்ந்து கிருபாகடாட்சம் வைத்திருக்கிறதையும், உத்தம விசுவாசிகளின் கூட்டமும், உமது நேச குமாரனுடைய ஞானக் சரீரமுமாகிய சபையில் நாங்கள் அவயவங்களாய் இணைக்கப்பட்டிருக்கிறதையும், அவருடைய அருமையான பாடுகளினாலும், மரணத்தினாலும் உண்டான புண்ணியத்தினாவே உமது நித்திய ராஜ்யத்துக்கு நாங்கள் சுதந்தரராயிருக்கிறதையும், இந்த நற்கருணையினாலே எங்களுக்கு நிச்சயப்படுத்தினதற்காக, முழு இருதயத்தோடே உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். பரம பிதாவே நாங்கள் இந்தப் பரிசுத்த ஐக்கியத்தில் நிலைத்திருந்து, நாங்கள் செய்யும்படி தேவரீர் நியமித்திருக்கிற நற்கிரியைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற, உமது கிருபையைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். சரீரமும் ஆத்துமாவுமாகிய எங்களை, முழுவதும் தேவரீருக்குப் புத்தியும், பரிசுத்தமும், ஜீவனுமுள்ள பலியாக எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் ஒப்புக் கொடுக்கிறோம். அவருக்கும், தேவரீருக்கும், பரிசுத்த ஆவிக்கும், சகல கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பெலனும், சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.

தேவன் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்!
விண்ணோர், மண்ணோர் கூட்டமாகப்
பாடுவார் சங்கீர்த்தனம்,
மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
ஸ்தோத்திரம் உண்டாகவே!

(குரு ஆசீர்வாதம் கூறுவார்)

எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்களோடே இருந்து, நீங்கள் கடவுளையும், அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் பற்றிய அறிவிலும், அன்பிலும் நிலைத்திருக்கும்படி, உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காக்கக்கடவது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியருமாகிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து, எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.

Tamil Christians Songs Lyrics

Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

Follow Us!

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
Logo