Ezekiel-45 – எசேக்கியேல்-45

Ezekiel-45 – எசேக்கியேல்-45

1. நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்.

2. இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.

3. இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.

4. தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும்.

5. பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகளிருக்கவேண்டும்.

6. பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தாரனைவருக்கும் சொந்தமாயிருக்கும்.

7. பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்குமுன்பாகவும், நகரத்தின் காணிக்குமுன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல்எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும்.

8. இது அவனுக்கு இஸ்ரவேலிலே காணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத் தக்கதாக விட்டுவிடுவார்களாக.

9. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

10. சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது.

11. மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.

12. சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.

13. நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்.

14. அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்துஅளவுகுடம் ஒரு கலமாகும்.

15. இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இரு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

16. இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாக தேசத்தின் ஜனங்கள் எல்லோரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக் கடனாளிகளாயிருக்கிறார்கள்.

17. இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.

18. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம்மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டுவந்து, பரிசுத்தஸ்தலத்துக்குப் பாவநிவிர்த்தி செய்வாயாக.

19. பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின வாசல்நிலைகளிலும் பூசக்கடவன்.

20. பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

21. முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும்.

22. அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக.

23. ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக.

24. ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.

25. ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo