GENESIS-47 – ஆதியாகமம்-47

GENESIS-47 – ஆதியாகமம்-47

1 யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;

2 தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.

3 பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,

4 கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

5 அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே.

6 எகிப்து தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்தில் உள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.

7 பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

8 பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான்.

9 அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

10 பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப் போனான்.

11 பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்து தேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.

12 யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்து வந்தான்.

13 பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற் போயிற்று; எகிப்து தேசமும் கானான் தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று.

14 யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.

15 எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள்

16 அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.

17 அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.

18 அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்து போயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.

19 நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத் தானியத்தைத் தாரும் என்றார்கள்.

20 அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.

21 மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான்.

22 ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம்பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.

23 பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம்; இதை நிலத்தில் விதையுங்கள்.

24 விளைவில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நாலுபங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாயிருக்கட்டும் என்றான்.

25 அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்.

26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்து வருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது.

27 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.

28 யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.

29 இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.

30 நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான்.

31 அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo