Jeremiah-2 – எரேமியா-2

Jeremiah-2 – எரேமியா-2

1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

3. இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.

4. யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

5. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும் ஒருவனும், கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,

6. என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?

7. செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.

8. கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.

9. ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10. நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,

11. எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.

12. வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.

14. இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்?

15. பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.

16. நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.

17. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?

18. இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?

19. உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

20. பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.

21. நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?

22. நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

23. நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.

24. வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.

25. உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால் நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.

26. திருடன் அகப்படுகிறபோது எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கடமையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.

27. அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.

28. நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.

29. என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

30. நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.

31. சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.

32. ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.

33. நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.

34. உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.

35. ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் என்னோடே வழக்காடுவேன்.

36. நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.

37. நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo