Joshua-4 – யோசுவா-4

Joshua-4 – யோசுவா-4

1. ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:

2. நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,

3. இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில்தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.

4. அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,

5. அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.

6. நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,

7. நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.

8. யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடு சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலே எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

9. யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.

10. மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.

11. ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள்.

12. ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணிஅணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.

13. ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.

14. அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

15. கர்த்தர் யோசுவாவை நோக்கி:

16. சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.

17. யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.

18. அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நதியிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது.

19. இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழ் எல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.

20. அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,

21. இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக்கற்கள் யாதென்று; தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது

22. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக்கடந்து வந்தார்கள்.

23. பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,

24. உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo