Matthew-26/மத்தேயு-26

Deal Score0
Deal Score0

1. இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

2. இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.

3. அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,

4. இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.

5. ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

6. இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில்,

7. ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.

8. அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?

9. இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

10. இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

11. தரித்திரர் எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.

12. இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.

13. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

14. அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:

15. நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.

16. அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.

17. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

18. அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.

19. இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள்.

20. சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.

21. அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

22. அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.

23. அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.

24. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

25. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.

26. அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

29. இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

30. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

31. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

32. ஆகிலும், நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.

33. பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான்.

34. இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

35. அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.

36. அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;

37. பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

38. அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;

39. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

40. பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?

41. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

42. அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

43. அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும், நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.

44. அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.

45. பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது.

46. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.

47. அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

48. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

49. உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

50. இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.

51. அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.

52. அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

54. அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.

55. அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.

56. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

57. இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.

58. பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.

59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.

60. ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்சாட்சிகள் வந்து:

61. தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்றான் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

62. அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

63. இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

64. அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

65. அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.

67. அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:

68. கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

69. அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றாள்.

70. அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.

71. அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேனாகிய இயேசுவோடே கூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.

72. அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.

73. சற்று நேரத்திற்குபின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.

74. அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.

75. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo